×

மத்திய அரசுக்கு சரண்டர் செய்த மருத்துவ இடங்களில் இடஒதுக்கீட்டை பின்பற்றாத அவலம்: திமுக எம்பி வில்சன் பேட்டி

சென்னை: மத்திய அரசுக்கு சரண்டர் செய்த மருத்துவ இடங்களில் விதிகளின் படி இடஒதுக்கீட்டு நடைமுறையை பின்பற்றாததால் பிசி, ஒபிசி பிரிவு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுக எம்பி வில்சன் கூறினார். இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று கூறியதாவது:மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளது. இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 15 சதவீதமும், முதுநிலை மருத்துவம், முதுநிலை டிப்ளமா மாணவர் சேர்க்கையில் 50 சதவீதமும் மத்திய அரசு வசம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று எம்சிஐ விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மாநில அரசு சரண்டர் செய்த இடங்களில் மாநில அரசின் இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படவில்லை. மாநிலத்தில் 1994ம் ஆண்டு சட்டப்படி பிற்படுத்தபட்டவர்கள் 30 சதவீதம், ஒபிசிக்கு 20 சதவீதம் என 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால் அந்த நடைமுறையை பின்பற்றவே இல்லை.

கடந்த ஆண்டு சரண்டர் செய்யப்பட்ட 1,073 எம்பிபிஎஸ் இடங்களில் 50 சதவீதம் 536 இடங்கள் பிசி, ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். பிடிஎஸ்சில் 74 இடங்கள், முதுநிலை மருத்துவத்தில் 537 இடங்கள், முதுநிலை டிப்ளமாவில் 197 இடங்கள் பிசி, எம்பிசி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மாநிலங்களவை பூஜ்ஜிய நேரத்தில் கடந்த ஜூலை 26ம் தேதி இதுபற்றி பேசினேன். அதுமட்டுமல்லாமல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு நவம்பர் 1ம் தேதி கடிதம் எழுதினேன். மாநிலங்களவையில் டிசம்பர் 6ம் தேதி இதுதொடர்பாக மீண்டும் பேசினேன். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டிசம்பர் 18ம் தேதி அனுப்பிய பதில் கடிதத்தில்,‘‘மாநில அரசு சரண்டர் செய்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் தனியாக விண்ணப்பிக்கலாம், அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசு சட்டங்கள் கட்டுப்படுத்தும்.

இதற்காக மாநில அரசுகள் சிறப்பு சட்டம் கொண்டு வரலாம்’’ என்று கூறியுள்ளார். தமிழகத்தில் 1994ம் ஆண்டு சட்டப்படி 50 சதவீத இடங்கள் பிசி, ஒபிசி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்களில் 27 சதவீதத்தை ஒபிசி பிரிவுக்கு வழங்கி வருகிறார்கள். ஆனால் மாநில அரசு சரண்டர் செய்த இடங்கள் ெதாடர்பாக, எந்த விதியும் குறிப்பிடப்படவில்லை. மாநில அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றலாம் என்று மட்டும் கூறியுள்ளார்கள். தெரிந்தே இத்தனை ஆண்டுகள் பிசி, ஒபிசி மாணவர்களுக்கு இடம் வழங்காமல் இருந்துள்ளார்கள். இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. 2020ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிய விதிகள் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு திமுக எம்பி வில்சன் கூறினார்.


Tags : Wilson ,government ,centers ,DMK ,Central Government ,Reserve ,Surrender and Medical Centers , DMK MP Wilson , not a reservation , central government, surrender , medical centers...
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற...